Tuesday, 6 February 2018

மார்க்சிய படிப்பு 15

அதிர வைக்கும் அதிரம்பாக்கம்! மானுட வரலாற்றில் முக்கியப் புள்ளி!
ஆரிய மாயைத் துடைத்தழிக்கும் ஆய்வு!

#மார்க்சிய_படிப்பு_வட்டம்_மதுரை
அதிரம்பாக்கம் என்பது சென்னையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ள ஓர் ஊர். அங்கே செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்கால ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இனம்தான் இந்தியத் துணைக் கண்டத்தின் தொன்மை குடிகள் என்ற கதை மேலும் மேலும் அடிவாங்குகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொன்மை மனித இனத்தினர் வெளியேறினார்கள் என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால், அதிரம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்லாயுதங்கள் 3 லட்சத்து 85 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை!

மனித வரலாற்றின் வளர்ச்சிப் போக்கைப் படிப்பது மிகவும் சிக்கலான ஒன்று. மரபணுவியல், மானுடவியல், தொல் பொருள் இயல் உள்ளிட்ட ஆய்வுகள் அதற்குத் தேவையானவையாக இருக்கின்றன. அதிரம்பாக்கத்தில் கிடைத்த கல்லாயுதங்கள் அதிநவீன கால நிர்ணய முறைகளின் மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

தொல் மானுடர்கள் எளிய கல்லாயுதங்களைச் செய்திருக்கின்றனர். ஆனால், அரூபமான முறையில் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும்போது மிகவும் மேம்பட்ட கல்லாயுதங்கள் செய்யப்பட்டன. அதிரம்பாக்கத்தில் கிடைத்த ஆயுதங்கள் மிகவும் மேம்பட்டவையாக இருந்தன. அது அந்த மனிதர்களின் மேம்பட்ட சிந்தனைத் திறனைக் காட்டுகிறது.

அதிரம்பாக்கத்தில், 385,000 ஆண்டுகள் துவங்கி 1 லட்சத்து 72 ஆயிரம் ஆண்டுகள் வரையிலான கல்லாயுதங்கள் கிடைத்திருக்கின்றன.

இந்தியத் துணைக் கண்டம் (இந்தியா என்று இன்று அறியப்படுவதல்ல), யூரேசியாவில் உள்ள ஜார்ஜியாவிற்கும் (மிகப் பழைய மனித மண்டையோடு கிடைத்த இடம்) தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையில் உள்ள பகுதியாக இருக்கிறது. இப்பிராந்தியத்தில் மிகப் பண்டைய மானுட வரலாற்றுத் தடயங்கள் கிடைத்துள்ள.

எனவே, அதிரம்பாக்கம் என்று இன்று அறியப்படும் இடம், மனிதர்கள் உருவானது, பரவியதற்கான, அவர்களின் தொழில்நுட்பங்கள் பரவியதற்கான ஓர் புள்ளியாக இருந்திருக்கக் வேண்டும்.
அதிரம்பாக்கத்தில் தொல்லியல் ஆய்வு 1999ல் துவங்கியது. தற்போதைய ஆய்வின் பிரதான நோக்கம் உலகப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது. அதிலும் குறிப்பாக, மானுடத்தின் தோற்றம் பரிணாமம் பற்றியது.
இதனைச் சாதிப்பதற்காக 7 ஆயிரம் கல்லாயுதங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. luminescence dating என்ற அதி நவீன முறையின் படி அவை ஆய்வு செய்யப்பட்டன.
அந்த ஆய்வு முடிவுகளின்படி, குறைந்தது 1 லட்சத்து 72 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது தற்போது நம்பப்படுவதைவிட 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் இருந்து மனித மூதாதையர்கள் அதிரம்பாக்கத்திற்கு வந்திருக்கின்றனர் என்பது உறுதியாகிறது.

இருந்தாலும் ஒரு சந்தேகம் நீடிக்கிறது. ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் உருவாக்கிய கல்லாயுதங்கள் அவையா? அல்லது, அதற்கு முன்பே இங்கிருந்த வேறு வகைப்பட்ட மானுடர்களா என்ற கேள்விக்கு தற்போது பதிலில்லை. ஆனால், தற்போது கருதப்படுவதைப் போலல்லாமல் 85 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்க மானுடர்கள் அங்கிருந்து வெளியேறினர் என்பதை வெகு சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. இருந்தாலும், இந்தியத் துணைக்கண்டத்திற்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையில் கிடைத்த பல்வேறு உயிர் படிவங்களின் (Fossil) மரபணுக்கள் கிடைக்கும்போது மேலும் விவரங்களை நாம் நெருக்கமாகக் கூற முடியும்.

ஆனால், கீழடி, கொடுமணல், அழகன் குளம் போன்ற தொல்லியல் ஆய்வுகளை முடக்கி வைத்திருக்கும் இந்திய அரசு அதிரம்பாக்க தொல்லியல் ஆய்வினை முன்னெடுக்கவில்லை. மாறாக, தனியார் முயற்சியிலேயே அதிரம்பாக்கம் அதிர வைத்துக்கொண்டுள்ளது. தனியார்மயமாக்கம் இந்துத்துவ சார்பு இந்திய அரசின் தொன்மை ஆய்வு மறுப்பு முயற்சிகளுக்கும் ஆப்பு வைப்பதாக இருப்பது முரண் வினோதம்தான்.
============================

இப்பிரச்சனை பற்றிய ஆய்வுக் கட்டுரை Nature இதழில் ஜனவரி 31, 2018ல் வெளியாகியிருக்கிறது. (https://www.nature.com)

ஆய்வுக் கட்டுரை பற்றிய எளிய வடிவிலான கட்டுரை https://thewire.in/…/stone-tools-found-tamil-nadu-suggest-…/ என்ற முகவரியில் காணக் கிடைக்கிறது. இதனையும் எளிமைப் படுத்தி, படிக்கத் தயங்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்கும் முயற்சியே இந்தப் பதிவு.
=================================

மார்க்சிய படிப்பு 13

#மார்க்சிய_படிப்பு_வட்டம்_மதுரை

இந்து என்று அறியப்படும் பிராமண மதம் பெண் கடவுளர்களை எப்படி எதிர்கொண்டது?
====================================

ஆண்டாள் பற்றிய வயிறு முத்தின் கூற்றை எதிர்ப்பது இன்று நடக்கிறது. ஆனால்,பெண்தான் முதல் என்பதை எதிர்ப்பதை ஆணிய பார்ப்பனர்கள் காலம் தோறும் செய்து வந்திருக்கின்றனர்.

அல்லி ராஜ்ஜியம் பற்றிய கதை கீழே.

#மார்க்சிய_படிப்பு_வட்டம்_மதுரை தோழர்கள் சில கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி வரும். எனவே, படிக்கவும். (கவனம் தோழர் மதி கண்ணன் கேள்விகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு)

(கீழே உள்ளது https://tamil.boldsky.com/…/history-about-aaravalli-soorava… என்ற வலைமனையில் எடுக்கப்பட்டது.)

ஆரவல்லி, சூரவல்லி : ஆண்களை அடிமைப்படுத்தியிருந்த அல்லிராஜ்ஜியம் பற்றி உங்களுக்கு தெரியுமா!!

ஒரு காலத்தில் இன்றைய கொள்ளேகாலம் தாலுக்காவுக்கும், பவானி தாலுக்காவுக்கும் எல்லையில் உள்ள பாலாற்றங்கரையில் உள்ள நல்லூர் கோட்டை என்ற பகுதியை கொடிகட்டி ஆண்டனர் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர். இவர்கள் சாகா வரம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு பல்வரிசை என்றொரு மகள் இருந்தால். மிகவும் அழகானவள், அவளது நளினத்திற்கும், கவர்ச்சிக்கும் மயங்காத ஆண்களே கிடையாது என்று கூறுவார்களாம். அப்பேர்ப்பட்ட அழகிக்கு திருமணம் செய்வதென்றால் லேசுப்பட்டக் காரியமா என்ன.

பல்வரிசையை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றால் ஆரவல்லி, சூரவல்லி வைக்கும் போட்டிகளில் வெற்றிப் பெற வேண்டும். இரும்பு குண்டை பொடியாக்க வேண்டும், இரும்பு கம்பியை ஒரே அடியில் மூன்றாக உடைக்க வேண்டும்,சேவல் கோழியோடு சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும் என்ற கடினமான போட்டிகளை வைத்து அதில் வெற்றி பெறுபவர் தான் பல்வரிசையின் கரம்பிடிக்க முடியும்.

இந்த போட்டியில் கலந்துக் கொண்டு பாதியிலேயே பின் வாங்கினாலோ அல்லது தோல்வியுற்றாலோ அடிமைகளாக சிறையில் அடைக்கப்படுவார்கள். இதன் காரணத்தினால் தான் இவர்களது இராஜ்ஜியம் அல்லி ராஜ்ஜியம் என்று கூறப்பட்டது. இவர்களுக்கு முடிவு கட்டவும் ஒரு நேரம் வந்தது, ஒரு வீரன் வந்தான்.....

7 சகோதரிகள்
ஆரவல்லி, சூரவல்லி இருவர் மட்டும் அல்ல, மொத்தம் ஏழு பேர் கொண்டவர்கள் இந்த சகோதரிகள். இவர்களில் ஆரவல்லி, சூரவல்லி பெயர்கள் மட்டுமே பல கல்வெட்டுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சூனியம் செய்பவர்கள்

ஆரவல்லயும், சூரவல்லியும் லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. சாகாவரம் பெற்றது மட்டுமில்லாது, மாய தந்திரங்கள், சூனியம், மாந்திரீகம் போன்ற செயல்களும் நன்கு அறிந்தவர்கள்.

பல இளவரசர்கள் அடிமையாகினர்
அழகு பதுமையான பல்வரிசையை திருமணம் செய்யும் ஆசையில் வந்த பல இளவரசர்கள் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினரிடம் அடிமைகள் ஆயினர்.
பீமனின் வருகை
ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளின் அட்டகாசத்தை கேள்விப்பட்ட பீமன், இவர்களது அல்லி ராஜ்ஜியத்திற்கு முடிவுக்கட்ட கிளம்பி வந்தான்.

பீமனும் தோல்வி

ஆரவல்லி, சூரவல்லி வைத்த மூன்று போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றிக்கண்ட பீமன். ஒரே அடியில் மூன்றாக உடைக்க வேண்டிய கம்பியை இரண்டாக தான் உடைக்க முடிந்தது. அதனால், பீமனும் தோல்வியுற்றான் என்று கூறி சிறையில் அடைத்தனர் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர்.

பெருச்சாளியாக மகாவிஷ்ணு

சிறையில் இருந்த பீமனைக் காப்பாற்ற பெருச்சாளியாக உருமாறி மகாவிஷ்ணு சென்றார். அப்போது தர்மர் குறிக்கிட்டு, முடிந்தால் போட்டியில் மோதி ஜெயித்து வாருங்கள் என்று கூறி தடுத்துவிட்டார். மகாவிஷ்ணுவும் பீமனை சிறையிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார்.

மகாவிஷ்ணுவான கண்ணபிரான், சகாதேவனை கூப்பிட்டு சாஸ்திரத்தை எடுத்து பார்க்க சொன்னார் , அப்போது பல்வரிசையின் கணவன் அல்லி முத்து என்று இருந்தது . அல்லிமுத்து அவர்களது தங்கை சங்கவதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அல்லிமுத்துவின் வருகை

பின் கண்ணபிரான் கூறியதற்கு இணங்கி அல்லிமுத்து போட்டிக்கு சென்றான். அங்கு பல்வரிசையின் அழகை கண்டு மயங்கிப் போனான். பின் பீமன் மற்றும் கண்ணன் முன்பே கூறிய அறிவுரைப்படி போட்டியில் கலந்துக்கொண்டு வெற்றியும் பெற்றான்.

ஆரவல்லி, சூரவல்லி சூழ்ச்சி

வெற்றிப் பெற்ற அல்லிமுத்துவை தங்களது ராஜ்ஜியத்திலேயே இருக்கும் படி ஆரவல்லி கூறினால். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து கூறியப்படி பல்வரிசையை மனம் முடித்து தன்னுடன் அனுப்புமாறு கூறினான் அல்லிமுத்து. இதனால், அல்லிமுத்துவை கொல்ல சூழ்ச்சி செய்தனர் ஆரவல்லி, சூரவல்லி சகோதரியினர்.

உணவில் விஷம்

இதன்படி பல்வரிசைக்கே தெரியாமல், உணவில் விஷத்தை கலந்து ஊருக்கு செல்லும் வழியில் அல்லிமுத்துவை கொன்றனர்.

அபிமன்யு உயிர் மீட்டெடுத்தல்

வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டெடுத்து வந்த அபிமன்யு. அல்லிமுத்துவிடம் நடந்ததை கூறினான். அதன் பின் கடும் கோபம் கொண்ட அல்லிமுத்து, அல்லி ராஜ்ஜியத்தை அழிக்க போர் எடுத்து சென்றான்

வனபத்ரகாளி அம்மன் அருள்புரிதல்

வழியில், வனபத்ரகாளி அம்மன் அருள் பெற்று, அல்லி ராஜ்ஜியத்தை தோற்கடிக்க முற்பட்டான் அல்லிமுத்து. உடன் அர்ஜுனனும் சென்றதாக கூறப்படுகிறது.

பயந்து ஓடிய அல்லி சகோதரிகள்
அர்ஜுனன் வருவதை கண்டு பயந்து கேரளத்திற்கு அல்லி சகோதரிகள் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின் அல்லிமுத்து, அடிமைகளாக இருந்த அரசர்களை விடிவித்து ஆண்களை காப்பாற்றினான்.

மாந்திரீகம்

கேரளாவில் மாந்திரீகம் வளர்ந்ததற்கு காரணம் இவர்கள் தான் என்று இந்த கதையில் கூறப்படுகிறது.

மார்க்சிய படிப்பு 14

பெண்களின் உலக வரலாறு #the_woemen_s_histroy
பகுதி 2: அடிப்படை மனித உயிர் பெண்ணே! வேட்டைச் சமூகத்தில் பெண்ணின் பாத்திரம்
====================================
#மார்க்சிய_படிப்பு_வட்டம்_மதுரை

நமது பாட்டி ஏவாளாக இருந்திருக்கக் கூடிய பெண்ணைப் பற்றிய இந்த நூல் இன்னமும் இளமைப் பருவத்திலேயே இருந்துகொண்டிருக்கிறது. ...
ஏனெனில் உயிரணுத் தொகுதியைக் கொண்ட ஒரு தாய், நிச்சயம் தனக்கு ஒரு தாயைக் கொண்டிருப்பாள். அவளுடைய வாழ்க்கைப் பங்காளிகள் யாராக இருந்திருப்பார்கள் என்பதோ, அவர்களின் எண்ணிக்கை என்ன என்பதோ முக்கியமில்லை. ஏனெனில் அவளின் உயிரணு மட்டுமே முக்கியமானதாக இருந்தது. ..... ஒரு மனித ஜீவியாவதற்கு ஒரு புதிய சிசுவுக்குத் தேவைப்படும் DNA செய்திகளைப் பொறுத்தமட்டிலும், அத்தியாவசியமான இன மரபுச் செய்திகள் அனைத்தும் பெண்ணாலேயே வழங்கப்படுகிறது. செலுத்தப்படுகிறது. அந்த அர்த்தத்தில் நாம் அனைவரும் ஏவாளின் குழந்தைகளே... மற்றும் ஆண்களுக்கே உரித்ததாகயிருந்தது என்று பொதுவாகக் கருதப்பட்ட வேட்டையாடுதல் போன்றவற்றின் பரிணாம வளர்ச்சியின் எல்லா அம்சங்களிலும் பெண்கள் முக்கியமாக ஈடுபட்டிருந்தது குறித்து பல்வேறு தொல்பொருள் ஆய்வு இடங்களிருந்து தொடர்ந்து சான்றுகள் கிடைத்துக்கொண்டேயிருக்கின்றன.

(அதிர்ச்சிகள் தொடரும்.)