Tuesday, 30 January 2018

மார்க்சிய படிப்பு 12

பகுதி 1: ஆண்கள் வழிவிலகித் தோன்றியவர்கள் மட்டுமே
====================================

#மார்க்சிய_படிப்பு_வட்டம்_மதுரை

பெண்களின் உலக வரலாறு #the_woemen_s_histroy

உலக வரலாறு ஆண்களால் எழுதப்பட்டது. அதனாலேயே, அது ஊனப்பட்டதாக இருக்கிறது. இந்தக் குறையை முதலில் சரி செய்ய முயற்சியெடுத்தவர்கள் மார்க்சும் ஏங்கல்சும்தான். 1844ல் எழுதப்பட்ட Economic and Philosophical Manuscripts-ல் சமூகம் எந்த அளவு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை, சமூகத்தில் பெண்ணின் நிலைமை என்னவென்பதிலிருந்து அறிய முடியும் என்று மார்க்ஸ் எழுதினார். அதன்பின் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், குறிப்பாக, குடும்பம்- தனிச் சொத்து- அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் சமூக வளர்ச்சியின் பெண்களின் பாத்திரம், தனிச் சொத்தின் தோற்றத்துடன் பெண் அடிமைத்தனம் தோன்றியது, தனிச்சொத்தினை அழிப்பது பெண் விடுதலைக்கான முன் நிபந்தனை என்ற அம்சங்களை ஏங்கல்ஸ் எழுதிச் சென்றார்.

இருந்தபோதும், கம்யூனிஸ்டுகளின் பார்வையில் பெண்ணிய அரசியல் முக்கியத்துவமற்றதாகத்தான் இன்னமும் இருந்துகொண்டிருக்கிறது.

NCBH வெளியிட்ட ‘உலக வரலாற்றில் பெண்கள்‘ என்ற (The Women's Histroy of the World) ரோஸ்லின் மைல்சின் நூல் கம்யூனிஸ்டுகளின் ஆணாதிக்க அணுகுமுறையை உடைப்பதை நோக்கமாகக் கொண்டது.

அதன் சில பகுதிகளை முகநூலில் பதிவு செய்வதென்பது வெகு நாள் திட்டம். ஆனால், நேரம் வாய்க்கவில்லை. தற்போது கிடைத்திருக்கும் ‘ஓய்வு‘ அதற்குப் பயன்படட்டும்.

இந்தப் பதிவுகளை #the_woemen_s_histroy என்று # டேக் செய்வேன்.

இது முதல் பகுதி..
பெண்கள்தான் மனித இனமேயாவர். சக்திவாய்ந்தத் தொடக்கப் பாலினமாவர். ஆண் என்ற பாலினம், உயிரியல் ரீதியில், பெண்ணினத்துக்குப் பிறகு ஏற்பட்டது. மானிட உயிரணுக் கட்டமைப்பில் பெண்ணின் உயிரணுதான் அடிப்படையான X குரோமசோம்களைக் கொண்டிருக்கிறது. ஒரு சிசு உருவாகும்போது, X உடன் மற்றொரு X யைச் சேர்த்துக்கொண்டு பெண்சிசு உருவாவது எளிதாக இருக்கிறது. ஆனால், அதேசமயம், ஒரு ஆண் சிசுவை உருவாக்குவதற்கு வேறு திசையில் கிளைவிடும் Y குரோமசோம் தேவையானதாக இருக்கிறது.... பெண்ணின் கருமுட்டை அதை சிசுவாக்குகின்ற விந்தணுவைக் காட்டிலும் பல நூறு மடங்கு பெரியது. குழந்தையை உருவாக்குவதற்கான அனைத்து உயிரணு செய்திகளையும் கொண்டதாக இருக்கிறது. எனவே, பெண்கள்தான் மூல- ஆரம்பப் பாலினமாவர். உயிரியல் ரீதியில் உருவான முதன்மை உயிராவர். ஆண்கள் வழிவிலகித் தோன்றியவர்கள் மட்டுமே.

(அதிர்ச்சிகள் தொடரும்.)

No comments:

Post a Comment