Friday, 12 January 2018

மார்க்சிய படிப்பு 8

#கீழடி முடக்கப்பட்டது ஏன்? (2)
#மார்க்சிய_படிப்பு_வட்டம்_மதுரை
இந்தியாவின் இன்றைய அரசியலைத் தீர்மானிப்பதாக இந்துத்துவம் வளர்ந்து நிற்கிறது. ஆரிய மதம் என்ற கற்பிதத்தின் மீது இந்து அரசியல் நிகழ்த்தப்படுகிறது. ஆரிய உன்னதம் என்பது பாசிசத்தின் வேராக இருக்கிறது. இதற்கு இணையான வேறு பல இன வாதங்களும் இருக்கின்றன. திராவிடம், தமிழ் இனம் அல்லது அதுபோன்ற மொழியடையாளங்கள், சாதி மற்றும் இன்ன பிற. ஆனால், இவையனைத்தும் கற்பிதங்களே.. அல்லது தப்பெண்ணங்களே. உயிர்களின் இயக்க விதிதான் மனித இனத்தையும் தீர்மானிக்கிறது. கற்பிதங்கள் என்ற கருத்துகள் அல்ல.
ஆனால், கெடு வாய்ப்பாக அறிவியலை அல்ல கற்பிதங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், கற்பிதங்கள் கோலோச்சுகின்றன. எனவே, அறிவியல் புரிதல்படி, காலந்தோறும் அது கொண்டுவரும் புதிய கண்டுபிடிப்புகள் அளிக்கும் நிரூபணங்களின் அடிப்படையில் தம் அறிவை வளர்த்துக்கொள்வது மார்க்சியர்களின் கடமை ஆகிறது.
பிரச்சனை என்னவென்று புரிந்துகொள்ள, இந்தியாவில் மனிதப் பரவல் பற்றிய சில பொதுவான/ ஆரம்பக்கட்ட செய்திகளைப் பகிர்ந்துகொள்வோம்.
இந்தியாவில் ஆதி மனிதர்களும், மனிதர்கள் போன்ற உயிரினங்களும் (Humanoids) நுழைந்தது 1 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. (http://science.sciencemag.org/content/331/6024/1596)
நவீன மனிதர்களின் மூதாதையர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவினார்கள் என்ற செய்தியை மரபணு அடிப்படையிலான ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இருந்தபோதும், மனிதர்கள் போன்ற உயிர்கள் (Humanoids) மனித உயிர்களாகப் பரிணமித்தது ஆப்பிரிக்காவில் மட்டும் நடந்தது என்று முடிவாக முடிவு செய்வது சரியானதல்ல. அல்லது, குறைந்தபட்சம் இப்போது இறுதி செய்யப்பட்டதல்ல. ஏனெனில், உயிரினங்களின் வளர்ச்சி விதி, பிரபஞ்ச இயக்க விதி போல எங்கும் பொதுவானது. எனவே, எதிர்காலத்தில் வரும் ஆய்வுகள் மட்டுமே இதுபற்றி மிகச் சரியான விவரங்களை அளிக்கும். தற்போது, மரபணு ஆய்வின் அடிப்படையிலான மனிதப் பரவல் பற்றிய கண்டுபிடிப்புகள் சொல்வதைப் பற்றி மட்டும் பேசுவோம்.
இந்தியாவில் மனிதப் பரவல் பல்வேறு அலைகளாக நடைபெற்றது. அலைகளாக என்ற வார்த்தையை நாம் உற்று நோக்க வேண்டும். அலைகள் வேறுபட்டுத் தெரியலாம். ஆனால், நீர் ஒன்றுபட்டு நிற்கும். அதுபோல, மனித இனங்களின் அலைகள் (வெவ்வேறு இனங்களின் ஆண்- பெண் பால்) ஒன்று கலப்பதும் இயற்கை விதிதான் என்பதையும் சேர்ந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு மனிதப் பரவல் பல்வேறு அலைகளாக நடைபெற்றது சில பத்து ஆயிரம் ஆண்டுகளில் நடைபெற்றிருக்கிறது.
தெற்கு கடற்கரை வழியிலான மனிதப் பரவல் இந்தியாவில் நுழைந்தது குறைந்தது 69 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. அதன்பின் மிகவும் சிக்கலான, குறுக்கு நெடுக்கிலான மனிதப் பரவல் நடைபெற்றது. தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவிற்குள் இது நடைபெற்றது. முன்பு வந்த மனிதர்கள் விவசாயத்தைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தபோது நடைபெற்ற இந்தோ யூரோப்பியன் - அதாவது ஆரிய இனப் பரவல் நிகழ்ந்தது. அதன்பின் முண்டா இனத்தவர்களும், திபேத்திய- பர்மிய இனத்தவர்களும் இந்தியாவிற்குள் வந்தனர்.
இந்தியாவில் இரண்டு விதமான மூதாதைகள் போக்கு இருந்திருக்கிறது. ஒரு வகை வட இந்தியர்கள். மற்றது தென்னிந்தியர்கள். வட இந்தியர்கள் மரபணு ரீதியில் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, அய்ரோப்பியர்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். மேற்சொன்ன இனங்களின் கலப்பாக வட இந்தியர்கள், பொதுவாக இருக்க, தென்னிந்தியர்கள் வட இந்தியர்களிடமிருந்து மாறுபட்ட மரபணு வரலாறு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதேசமயம், இந்தியாவிற்கு வெளியில் உள்ள இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியே உள்ள இனங்களில் இருந்து மிகவும் மாறுபட்ட மரபணுக்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
தென்னிந்தியர்கள்தான் முதலில் இந்தியாவில் குடியேறியவர்கள் என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். அனேகமாக, ஆப்பிரிக்காவில் இருந்து தெற்குப் பாதையில் 69 முதல் 77 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் பரவ ஆரம்பித்தபோது இந்தியாவில் குடியேறிய தொன்மை குடியேறிகளாக தென்னிந்தியர்களின் மூதாதையர்கள் இருப்பார்கள். அதாவது, கடற்கரை வழியாக இந்தியாவிற்குள் 69 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த தென்னிந்தியர்களின் மூதாதையர்களும், அதன் பின் வந்த வட இந்தியர்களின் மூதாதையர்களின் வழிவந்தவர்களும் இன்றைய காலத்திலிருந்து 4200 முதல் 1900 ஆண்டுகள் வரை இனக் கலப்பில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்று மரபணு தடயங்கள் காட்டுகின்றன. அதற்குப் பின்பு ஏற்பட்ட ‘இந்து‘ கருத்தாக்கத்தின் காரணமாக ஒரு தார மணம் நடைமுறைக்கு வந்தது. இயற்கையான இனக்கலப்பு ‘சட்டத்தின்‘ மூலம் தடுக்கப்பட்டது. இருந்தாலும், இயற்கை தன் வேலையைப் பார்த்திருக்கும். இருந்தபோதும், நீண்ட காலப் போக்கில் அற்பமான அளவுக்கானதாகக் சுருக்கப்பட்டிருக்கும்.
இதற்கு மேலும் முகநூலுக்கான பதிவில் விரிப்பது படிப்பதைத் தடுக்கும். மற்றவற்றை பிறகு பேசுவோம்.
சாரமாகப் பார்க்கப் போனால், நாம் சென்ற வகுப்பில் பார்த்தது போல, நட்சத்திர தூசுகளில் இருந்து உலகமும் உயிர்களும் முகிழ்த்தன. பின்னர், ஒற்றைச் செல் உயிர் முதல் ஆக அறிவுள்ள மனிதர்கள் வரை பரிணாமம் இயற்கை விதிகளின் படி முன்னேறிச் சென்றது. எனவே, நாம் அனைவரும் ஒன்று. வேறுபாடுகள் இருந்தபோதும்!
ஆனால், வளர்ச்சிப் போக்கில் பல்வேறு புள்ளிகளில் வளர்ச்சி கண்ட மானுடம் ஒரே புள்ளியான இந்தக் காலகட்டத்தில், ஒவ்வொரு புள்ளியும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வாதிடுவது பிற்போக்கானது. உயிரின் அதி உன்னத வடிவமாக இருக்கும் மானுடர் தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்ளும் செயல் இது.
இந்தியாவில் இந்த அறிவீனத்தின் துவக்கப் புள்ளியாக பார்ப்பனிய- ஆரிய சிந்தனை- கருத்தாக்கம் இருக்கிறது.
அதற்கு மரண அடி கொடுக்கும் வகையில் #கீழடி அகழ்வாராய்ச்சி அமைந்தது. தென்னிந்தியாவில் 69 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மனிதப் பரவலின் அடையாளமாக கீழடி இருக்கிறது.
பின்னர் வந்து சேர்ந்த வட இந்திய மூதாதையர்கள் ஆரிய- பார்ப்பனிய- இந்து அடையாளத்தை முன்னிறுத்தி ஆளுமை கோருவதை அது தடுக்கிறது.
எனவேதான், கீழடி முடக்கப்பட்டது.

No comments:

Post a Comment