Friday, 12 January 2018

மார்க்சிய படிப்பு 2

இயற்கையின் விதிகள் எங்கும் ஒன்றே போல செயல்படுகின்றன என்று சென்ற வகுப்பில் பார்த்தோம். பிரபஞ்சம் துவங்கி உயிர் வளர்ச்சி வரை. இப்போது இலக்கிய வளர்ச்சியை ஒப்பிட்டு பல்வேறு சமூகங்களின் வளர்ச்சியையும் அதனுடன் மனிதப் பரவல் காலகோட்டையும் ஒப்பிட இருக்கிறோம். அதனால் இதனைப் படியுங்கள். வீரயுகப் பாடல்கள் பற்றிய மற்றொரு ஒப்பீடு.. 3. தமிழ் வீரயுகப் பாடல்கள்
1911-ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற் பேராசிரியராக இருந்த எச்.எம்.சாட்விக் என்பார் (Heroic Age) வீரயுகம் என்ற நூலை வௌியிட்டார். பழம் ஜெர்மானியரது காவியப் பாடல்களை ஆராய்ந்த அவர், அவற்றைக் கிரேக்க ஆதிகவியாம் ஹோமருடைய காவியங்களுடன் ஒப்பு நோக்கி, இரு மொழியிலெழுந்த வீரகாவியங்களும் வாய்மொழியிலக்கியமாகத் தோன்றியவை என்று பல சான்றுகாட்டி நிறுவினார். அவரது அம்முயற்சி, பல மொழிகளிலுமுள்ள காவியங்களையும் பாடல்களையும் ஒப்பு ஆராய்ச்சி செய்வதற்கு வழிகாட்டியது. சாட்விக் காட்டிய வழியைப் பின்பற்றி அவரது மேற்பார்வையில் ஆராய்ச்சி நிகழ்த்திய என்.கே.சித்தாந்தா என்பார் வடமொழி இதிகாசங்களாம் ராமாயணம், பாரதம் ஆகியன வீரகாவியங்களென்றும், வாய்மொழியிலக்கியங்கள் என்றும் கூறியதோடமையாது, அவற்றைப் பிற வீரகாவியங்களுடன் ஒப்பு நோக்கியும் ஆராய்ந்தனர். சாட்விக் காட்டிய பாதையில் சிலாவிக் வீரப் பாடல்களும் ஐஸ்லாந்து ஐதிகக் கதைகளும், நன்கு ஆராயப்பட்டன. அதன் பின்னர் சுமேரியப் பாடல்களும் வீரகாவியங்களாக நிரூபிக்கப்பட்டன. அண்மைக்காலத்தில் ஆப்பிரிக்கக் குலத்தவர் பலரிடையே வழங்கும் கதைப்பாடல்கள் வீரப்பாடல்கள் என்ற வகையிலும், வாய் மொழிப் பாடல்கள் என்ற அடிப்படையிலும் அதிகமாக ஆராயப்பட்டு வருகின்றன. இத்தகைய ஒரு பின்னணியிலேயே சான்றோர் செய்யுட்களை வீரயுகத்துக்குரியனவாகக் கொண்டு, அவற்றைக் கிரேக்க ஆதிகாவியங்களுடன் ஒப்பு நோக்க முனைந்தேன்.
தமிழ்க் கவிதைகளுக்கும் கிரேக்கப் பாடல்களுக்கும் ஒப்புமைகள் இருப்பது அவ்வப்போது சிலராற் குறிப்பிடப்பட்டுள்ளது. தென்னிந்திய மொழிகளைப் பற்றி கட்டுரையொன்றெழுதிய ஜி.யூ.போப்பையர் 1885-இல் பின்வருமாறு கூறினார்: "பழந்தமிழ்ப் பாடல்களின் உணர்வுநிலையும் அவை தோன்றிய காலத்துச் சமுதாய நிலையும் அவற்றுச் சமமான கிரேக்க பாடல்களுடன் பெரிதும் ஒப்புமையுடையனவாகக் காணப்படுகின்றன." 1923-இல் தென்னிந்தியாபற்றிய வரலாற்று நூல் ஒன்று வௌியிட்ட எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் "சங்கச் சான்றோர் செய்யுட்கள், ஹோமரது இலியாது காவியந் தோன்றுவதற்கு ஆதாரமாகவிருந்த வீரக்கதைகளை ஒத்தனவாயுள்ளன" என்று குறிப்பிட்டார். அவரை அடுத்துச் சித்தாந்தா தமது (Heroic Age of India) "இந்திய வீரயுகம்" என்ற நூலிலே, தமிழ்ப் புறத்திணைப் பாடல்கள், "பிறமொழிகளிலுள்ள வீரப்பாடல்களுடன் ஒப்பு நோக்கி ஆராயப்படுந் தகைமையுடையன" என்றார். திரு.சித்தாந்தா தமிழரல்லாதவாதலின், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை முதலியனபற்றி ஆங்கில மூலம் அறிந்தவற்றைக் கொண்டு அவ்வாறு கூறினார். ஐரோப்பிய காவியங்களை நன்காராய்ந்து எழுதியவர்களான சாட்விக், டபிள்யூ.பி.கேர், அபெர்குரொம்பி முதலிய ஆசிரியரைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்திய எஸ்.வையாபுரிப்பிள்ளை 1952-இல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய காவிய காலம் என்ற சொற்பொழிவுத் தொடரில், சாட்விக்கின் வீரயுகம் என்ற நூலைக் குறிப்பிட்டு, "வீரயுகத்திற்கு உரியனவாகச் சாட்விக் பேராசிரியரால் தமது 'ஹிரோயிக் ஏஜ்' என்ற நூலிற் கூறப்பட்டுள்ள சில இயல்புகள் அனைத்தும், முற்சங்க இலக்கியங்கள் சித்தரிக்கும் சமுதாயத்தில் உளவாதல் காணலாம்" என்றார். 1953 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தில் எட்டுத் தொகைபற்றி ஆய்வுரை சமர்ப்பித்த ஜே.ஆர்.மார் கிரேக்க பாடல்களைப் போல பழந்தமிழ்ச் செய்யுட்களும், வாய்மொழியிலக்கியமாக இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். பழந்தமிழ்க் கவிதைகளின் இயற்கைபற்றி ஆராய்ந்த பேராசிரியர் தனிநாயக அடிகளாரும், பழந்தமிழ்க் காதல் பற்றி ஆராய்ந்த கலாநிதி வ.சுப.மாணிக்கனாரும், தத்தம் நூல்களில் இடையே கிரேக்க நூல்களிற் காணப்படும் ஒப்புமைக் கருத்துக்களைச் சுட்டிச் சென்றனர்.
போப்பையரிலிருந்து கலாநிதி மார்வரை, மேற்கண்டவாறு சில அறிஞர் கிரேக்க இலக்கியங்களுக்கும் தமிழ் நூல்களுக்குமுள்ள ஒப்புமைகளைக் குறிப்பிட்டனரெனினும் அப்பொருள்பற்றித் தனியாக எவரும் ஆராய்ந்தாரல்லர். அது மட்டுமன்று; கிரேக்க ஆதிகாவியங்கள் பற்றிய ஆராய்ச்சியும் கடந்த முப்பது நாற்பது ஆண்டுக் காலத்தில் புதுப்புது வழிகளிற் சென்றுள்ளது. அவ்வாராய்ச்சிகளின் பண்பையும் பயனையும் கவனிப்பதும் முக்கியமானதாகும்.
இதுகாலவரை தெரியவந்துள்ள வீரயுகங்களுள் காலத்தால் முந்நியது கிறித்துவிற்குமுன் மூவாயிரம் ஆண்டளவிலே மெஸொப்பொத்தேமியாவில் நிகழ்ந்த சுமேரிய வீரயுகமாகும். அதற்கடுத்தபடியாகக் கிறித்துவிற்கு முன் ஈராயிரமாண்டுகளுக்கு முன்பின்னாகக் கிரேக்கத்தில் நிகழ்ந்த வீரயுகத்தைக் கொள்ளலாம். வடஇந்தியாவில் அடுத்தபடியாக அமைவது பழந்தமிழரது வீரயுகமாகும். இது கிறித்துவிற்கு எழுநூறு ஆண்டுகள் முன் தொடங்கியிருக்கலாம். ஆயினும் பெரும்பாலும் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் இது நிகழ்ந்தது எனக் கருதுவது பொருத்தமாகும். உலகின் பிற பகுதிகளிற் காணப்படும் வீரயுகங்களும் அவற்றைச் சேர்ந்த பாடல்களும், கிறித்துவிற்குப் பின் பல நூற்றாண்டுகள் தமிழரது வீரயுகம் புராதன சுமேரியர், கிரேக்கர் முதலியோரின் வீரயுகங்களுடன் ஒருசேர வைத்து நோக்கும் பெருமையுடையது எனலாம்.
வீரயுகத்திற்குரிய பழைய வீரப்பாடல்கள் அனைத்தும் வாய்மொழியிலக்கியமாகவே அமைவன என்பதை முதன் முதலில் ஐயத்திற்கிடமின்றி நிறுவியவர் மில்மன் பரி என்ற அமெரிக்கர். செம்மை சான்ற உயர் தனிக் கவிதைகளாம் கிரேக்க ஆதி காவியங்கள் எழுத்தறிவில்லாத வாய்மொழிக் கவிஞராற் குலமரபுத் தொழிலாகப் பாடப்பெற்றன என்று ஆணித்திரமாக 1927இல் அவர் எடுத்துக்கூறிய போது, அறிஞருலகம் திடுக்கிட்டது. ஆயினும் காலப்போக்கில் பரியின் முடிவு சரியானதே என்பது உறுதிப்பட்டு வந்துள்ளது. மில்மன்பரி யூகோசிலாவியாவில் காடு மேடெல்லாம் திரிந்து, வாய்மொழியிலக்கியங்களைக் கேட்டு ஒலிப்பதிவு செய்தவர்; அவற்றை ஆழமாக ஆராய்ந்ததன் விளைவாகவே அவற்றிற்கும் கிரேக்க ஆதிகாவியங்களுக்கும் பற்பல ஒப்புமைகள் இருப்பதைக் கண்டார். நாட்டுப்புறத்து நாடோடிப் பாடகர்களின் கலையின் துணைகொண்டு பண்டைப்புலவனது கலையை விளக்கினார் அவர். அந்த வகையில் ஒப்பிலக்கிய சாட்விக், பரி ஆகிய இருவரும் தனிச்சிறப்பானவர்கள். அவர்கள் கையாண்ட ஆராய்ச்சி முறை பண்டைத் தமிழ்ச் செய்யுட்களை நன்கு ஆராய்வதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பேருதவியாயுள்ளது.
கிரேக்க ஆதிகாவியங்களைப் படிக்கும் பொழுது, அவற்றில் மீண்டும் மீண்டும் வந்து வழங்கும் அடைமொழி புணர்த்த பெயர்களும் (Non-Epithets) மரபுத் தொடர்களும் (Formulae) நிறைந்திருக்கக் காண்கின்றோம். உதாரணமாக ஓதீசி காவியநாயகனைக் குறிப்பிடுமிடங்களில் 'நெடுநாட் கவலும் ஓடீசியஸ்' என்றும், அவனது காவற்தெய்வத்தை 'ஒளிக்கண் அதீனி' என்றும், மானவீரன் ஹெக்டரை 'புகழ்சால் ஹெக்டர்' என்றும், நெஸ்டொர் என்பானை 'தேருடைய கெரெனியன் நெஸ்டொர்' என்றும் மெனெலாஓஸ் என்பானை உரத்த போர்க்குரல் மெனெலாஓஸ் என்றும், இவைபோலப் பிற வகையிலும் கவிஞர் பாடக் காணலாம். மக்கள் மட்டும் இவ்வாறு மரபுத் தொடர்களால் வழங்கப்படுவர் அல்லர்; பொருள்களும் அடை புணர்ந்தனவாயுள்ளன. 'பொன் மலி துரோய்' பொற்றூண் மனை உவைன் நிறங்கருங்கடல் 'செவ்விரல் வைகறை', 'கண்ணகன்ஞாலம்' 'ஒள்ளிய கால்கள்' 'நீள் நிழல் எஃகம்' 'தேவாமிர்த இரவு' போன்றவை பொருட்பெயர்கள் அடைபுணர்ந்து வருவதற்கு உதாரணம். ஆயிரக்கணக்கிலுள்ள இத்தகைய மரபுச் சொற்றொடர்களைக் கருவியாகக் கொண்டு வேகமாகப் பாடிச் செல்வதே வாய்மொழிப் புலவர் உத்தியாகும். துரோய் நகரத்து வீரன் ஹெக்டர் என்று பாட வேண்டிய சந்தர்ப்பம் வந்ததும், "பொன்மலி துரோய் புகழ்சால் ஹெக்டர்" என்று அழுத்தந் திருத்தமாகச் சொற்கள் தகுந்தபடி வந்தமையும், மில்மன்பரி கூறினார்:
"பிற வாய்மொழிப் புலவர் யாவரையும் போலவே, ஹோமருக்கும் பாடுவதென்றால் நினைவு கூர்வதாயிருந்தது; வீரகாவியப் பாடல் மரபைத் தமக்களித்துச் சென்ற முந்தைய புலவரது சொற்கள், சொற்றொடர்கள், அடிகள் முதலியவற்றை நினைந்து பயன்படுத்துவதே அவரது பாடல் முறையாயிருந்தது."
இவ்வாறு மரபுத் தொடர்களும் கருத்துக்களும் மீண்டும் மீண்டும் வருதல் வாய்மொழி இலக்கியத்தின் முக்கியமான பண்புகளில் ஒன்று. அதாவது திரும்பக் கூறல் உலகெங்கிலும் வாய்மொழியிலக்கியத்தின் இன்றியமையாத கூறாகக் கொள்ளப்படுகிறது. இதற்கு முதற்றேவையாக வாய்மொழியிலக்கியப் பாடல்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஏறத்தாழ ஒரே தன்மையான யாப்பில் அல்லது பாவகையில் அமைந்திருக்கக் காணலாம். கிரேக்க காவியங்கள் பாடப்பெற்ற அறுசீரடிப்பா (Hexameter) பலவழிகளில் எமது அகவற் பாவை ஒத்தளது. சான்றோர் செய்யுட்கள் பெரும்பான்மை (அகம்புறம் என்ற வேற்றுமையின்றி) அகவலில் அமைந்திருப்பதால், அடைமொழி புணர்த்த பெயர்களும், தொடர்களும் வெவ்வேறு கவிஞர்க்கும் பொதுவானவையாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே பிரெஞ்சு நாட்டுத் தமிழறிஞர் மெயில் பின்வருமாறு கூறியுள்ளார்:
"(சான்றோர் செய்யுட்களைப் பொறுத்தவரையில்) புலவரின் தனிநடைச் சிறப்பை (Style) ஆதாரமாகக் கொள்ளக்கூடாது; ஒவ்வொரு புலவனுக்கும் உரிய தனிப் பண்பை, நடைச் சிறப்பியல்பை, இது காலவரை கண்டறிய முடியாதுள்ளது. யாவும் ஒரே உற்பத்திச் சாலையிலிருந்து வௌிப் போந்தன போலத் தோன்றுகின்றன. நடைப் பொதுமை அவ்வளவு உயர்ந்து காணப்படுகிறது"
இக்கூற்றைச் சிறிது விளக்குவோம். சங்க இலக்கியங்கள் பற்றி எழுதிய தமிழறிஞர் பலர், பரணர், கபிலர், நக்கீரர், ஔவையார், மாங்குடி மருதன் முதலியோர் சிறந்த புலவர்கள் என்று கொண்டு அவரது "கவிச் சிறப்புகளை" விதந்து கூறியுள்ளனர். ஆனால் சான்றோர் செய்யுட்களை நுணுகி ஆராயும் பொழுது, இப் பெரும்புலவர்களும், நூற்றுக் கணக்கான பிற புலவோர் பயன்படுத்திய சொற்கள், சொற்றொடர்கள், அடிக்கருத்துக்கள், உவமை உருவகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கக் காணலாம். உதாரணமாக,
"பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்"
(பாரி வள்ளலின் பறம்பு மலையிடத்துளதான குளிர்ந்த சுனையின்கண் உள்ள தௌிந்த நீர்)
என்ற நாற்சீரடி, "பெரும்புலவர்' கபிலரால் மட்டுமன்றி, மிளைக்கந்தன் (குறுந்தொகை 196) நன்னாகனார் (புறம் 176). முதலியோராலும் கையாளப்பட்டுளது. கிரேக்க ஆதிகாவியங்களிற் காணப்படுவது போலவே, சான்றோர் செய்யுட்களிலும், உயர்திணைக் குரிய மக்கள் தேவருக்கு மட்டுமன்றி அஃறிணைப் பொருட்களுக்கும் அடை சேர்க்கப்பட்டிருக்கிறது. சில குறிப்பிட்ட அடைகள் அழகும். யாப்பின் தேவையும் கருதிப் பலபெயர்களுக்கு அடையாகவும் அமைவதுண்டு. உதாரணமாக இயல்தேர் என்னுஞ் சீர் மற்றொரு சீராக அமையும் பின்வரும் ஆடவரைச் சிறப்பித்தளது. பொறையன், வழுதி, சென்னி, குமணன், வளவன், அண்ணல், குரிசில், தந்தை, குட்டுவன், கொண்கன், நன்னன், செழியன், பொருநன், மோரியர், அழிசி, அதியன், இப்பதினாறு பெயர்களும் நன்கு செய்யப்பட்ட தேரையுடையவர் என்பது பொருளன்று. இயல் தேர் மரபு வழிவரும் பயன்பாட்டு அடைத் தொடராகவே நிற்கிறது எனல் வேண்டும். இது போலவே பல பொருட் பெயர்களுக்கும் பொதுவான அடைக்கு உதாரணம் பார்ப்போம். 'கல்லெனல்' தமிழ்ச் செய்யுட்களில் ஆரவாரம் பரபரப்பு ஆகியவற்றை உணர்த்தும் ஓசைக் குறிப்பாகும். அகவற் பாலிற் முதற்சீராய், அடுத்துவரும் சீருக்கு அடையாய் நிற்பது. "கல்லென்" என்பது பின்வரும் பொருட்களைச் சிறப்பித்துளது. பேரூர்- (இது சிலப்பதிகாரம் போன்ற அகவல் யாப்பிலமைந்த பிற்கால நூல்களிலும் மரபுத் தொடராய் வருவது) - பாசறை, பொருநை, சேரி, பாக்கம், கறுங்குமணி, ஞாட்பு, கௌவை, சீறூர், கம்பலை, கடம், துவலை, கானம், விடிவு, ஊர், கல்லென் சும்மையர் என்ற தொடரும் காணப்படுகிறது (அகம் 86:18) இத்தகைய சான்றுகள் அடைபுணர்த்த பெயர்களும், மரபுச் சொற்றொடர்களும் மீண்டும் மீண்டும் வருவதை ஐயத்துக்கிடமின்றி நிரூபிக்கின்றன. இவற்றுக்கு மேலும் சில உதாரணங்கள் காட்டுவோம் :
அடைமொழி புணர்ந்த பெயர்கள்:
வெண்கோட்டி யானை
வெண்டலைப் புணரி
நெடுந்தேர் அஞ்சி
சிறியிலை நெல்லி
வாய்வாள் வளவன்
பல்வேற் சாந்தன்
கடியுடை வியனகர்
மரபுத் தொடர்:
1. ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
2. கருவிவானம் தண்டளி தலைஇய
3. கடும்பகட்யானை நெடுந்தேர்க் குட்டுவன்
4. படலைக் கண்ணிப் பரேரெறுழ் திணிதோள்
5. முடலை யாக்கை முழுவலி மாக்கன்
இத்தகைய நூற்றுக்கணக்கான அடைமொழி புணர்த்த பெயர்களும் தொடர்களும் சான்றோர் செய்யுட்களில் மீட்டும் மீட்டும் பயின்றுவரக் காணலாம். சொற்கள், இவ்வாறு பயின்று வரவே, உவமை, உருவகம், பொருள், அடிக்கருத்து (Themes) ஆகியனவும் மீட்டும் மீட்டும் வருதல் இயல்பேயன்றோ?
அடைமொழி புணர்ந்த பெயர்களும் தொடர்களும் மீட்டும் மீட்டும் வருவது போலவே அடிக்கருத்துக்களும் மீட்டும் மீட்டும் அமைந்துவருவன. இவ்வாறிருப்பதன் காரணமாகவே சான்றோர் செய்யுட்களைத் திணை, துறை என்னும் பிரிவுகளுக்குள் தொகுத்து வகுத்தனர் இலக்கண ஆசிரியர்களும் உரைகாரரும். குறிஞ்சித் திணைக்குப் புணர்தலும், பாலைக்கு உடன் போக்கும், வெட்சிக்கு ஆநிரை கவர்தலும் எனத் திணைகளுக்கு ஏற்ற ஒழுக்கமும், அவற்றின் உபபிரிவுகளாகத் துறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. சிற்சில குறிப்பிட்ட துறைகளை அல்லது பாடற்பொருள்களை அடிப்படையாகக் கொண்டே அக்காலக் கவிஞர் பாடினர் என்பதனை இவ்விலக்கணப் பாகுபாடு தௌிவாகக் காட்டுகின்றது. வெல்ஷ் வீரப்பாடல்களிலும் இத்தகைய அமைதியைக் காணலாம். தமிழ்ச் சான்றோருடன் பல துறை ஒப்புமையுடையவராகக் காணப்படும் முற்கால வெல்ஷ் கவிஞர் வாய்மொழி யிலக்கியமாகப் பெருந்தொகையான பாடல்களை விட்டுச் சென்றனர். அவையாவும் துறைகளாக வகுக்கப்பட்டுள்ளன என்று Book of Leinster என்ற நூல் கூறும். படையெடுத்தல், எரிபரந்தூட்டுதல் காட்சி உடன்போக்கு உண்பாட்டு, காதல் முதலியன அவற்றிற் சில. இத்தகையதொரு போக்கைப் பண்டைய ஐரிஷ் ஐதிகக் கதைகளிலும் காணலாம். தாவுகின்ற பரிமாவின் மீதிவர்ந்து சென்று, தாணிபரும் அரிவையரும் உருவ இசை பொழிந்த இப்பண்டைப் பாடுநகர்கள் தமது பாடல்களைத் துறைகளின் அடிப்படையிலேயே அமைந்திருத்தனராம்.
ஆநிரை கவர்தல், வீரச்செயல்கள் புரிதல், தும்மைப்போர், கொள்ளையடித்தல், காதற் செயல்கள், படையெடுப்பு, உடன்போக்கு, வெறியயர்தல், உண்டாட்டு, வெள்ளப்பெருக்கு, முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டவை அவற்றுட் பல. இவற்றிற்கும் பழந்தமிழ்ச் செய்யுட்களுக்கும் உள்ள ஒப்புமை வௌிப்படை. இத்தகைய ஒப்புமைகள் தற்செயலாக நிகழ்வன அல்ல. சான்றோர் செய்யுட்களைப் போலவே முற்கால வெல்ஷ். ஐரிஷ் பாடல்களும் அவர்களது வீரயுகத்துக்குரியன. எனவே, கவிமரபிலும், பொருளமைதியிலும் ஒப்புமைகள் காணப்படுவது தவிர்க்க முடியாததே, பொருளமைதியிலும் ஒப்புமைகள் காணப்படுவது தவிர்க்க முடியாததே. பண்டைக் கிரேக்கக் காவியப் பாடல்களும் சிற்சில அடிக்கருத்துக்களை (Themes) ஆதாரமாகக் கொண்டே தோன்றி, காலப் போக்கிற் பெருங் காப்பியமாக உருப்பெற்றன. இலியாது, ஓதீசி ஆகியவற்றிற் பல கிளைக் கதைகள் இருப்பதும் முன் கூறிய உண்மையை வற்புறுத்தும்.
"சங்கச்" சான்றோர் செய்யுட்கள் தொடக்கத்தில் வாய்மொழி வாயிலாகவே பிறந்து வளர்ந்து நடந்திருத்தல் வேண்டும் என்பது போல காரணங்களால் உறுதிப்படுகின்றது. சான்றோர் செய்யுட்களில் பாடலைக் குறிக்கும் போதெல்லாம் அவை வாயாற் பாடப்படுவன வாகவன்றி எழுதப்படுவனாகக் குறிப்பிடப்படாமை முதற்கண் அவதானிக்கத் தக்கது. தமிழக நிலப்பரப்பில் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் தொடர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர் என்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மை. தமிழரது நாகரிக வளர்ச்சியைே சான்றோர் செய்யுட்களில் காணக்கூடியதாக உள்ளது. ஒரு சிறு உதாரணங் காட்டலாம். புறப்பாடல்களில் தோல் என்னும் சொல் போர் வீரர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளப் பயன்படுத்தும் கேடயத்தைக் குறிப்பது. மரத்தாலும், உலோகத்தாலும் கேடயங்கள் செய்யப்படுமுன் மிருகங்களின் தடிப்பான கடினமிக்க தோலினாலேயே கேடயங்களைச் செய்தனர். இந்திய ஆதிவாசிகள் மத்தியிலும், சில ஆப்பிரிக்கக் குலத்தவர் மத்தியிலும் இத்தகைய 'தோல்' இன்னும் பயன்பாடு பொருளாயிருக்கக் காணலாம். சான்றோர் செய்யுட்களில் தோல், பலகை, உலோகம், ஆகியவற்றால் செய்யப்பட்ட கேடயங்கள் பற்றிய செய்திகள் உள. பிற்காலத்தில் தோலினாற் கேடயங்கள் செய்யும் வழக்கம் மறைந்த போதும், தோல் என்ற சொல் நிலைத்து விட்டது. இஃது மொழியியலாளர் நன்கறிந்த உண்மை. பழங்காலத்திலே இலை, குழையினால் காதணிகள் செய்து அணிந்தனர். பிற்காலத்தில் பொன்னாற் செய்த காதணியையும் காதோலை, குழை என்றெல்லாம் வழங்கினர்; கிராமப் புறங்களில் இன்றும் இச்சொற்கள் வழக்கிலுள.
பல்வேறு காலத்துக்குரியனவான வாழ்க்கைச் செய்திகள், கதைகள், நம்பிக்கைகள், முதலியன ஒரே பாடலிலோ, அன்றி ஒரே தொகுதியிலுள்ள பாடல்களிலோ கலந்து காணப்படும் பொழுது, அவற்றைக் கால, இட வழு என்பதிலும், அவை மரபுச் செய்திகள், என்பதே பொருத்தமாகும். பல தலைமுறைகளுக்குரிய செய்திகள் செவிவழிச் செய்திகளாகவும், வாய்மொழிச் செய்திகளாகவும் நிலவி வந்துள்ளன. சான்றோர் செய்யுட்கள் இவ்வுண்மைக்குச் சிறந்த உதாரணங்கள் எனலாம். வாய்மொழி இலக்கிய மரபு, வழி வழி வரும் பாடுநரால் பேணி வளர்க்கப்படுவதொன்று, அது காலத்தையொட்டிய சிற்சில மாற்றங்களுடன் பெரும்பாலும், மரபு நெறி பிறழாதது. வாய்மொழி இலக்கியம் பண்தொட்டு வளர்ந்து வந்ததொன்று என்பது.
"பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப"
என்ற பெருந்தலைச் சாத்தனார் சொற்களால் (புறம். 151) புலப்படும். முன்பேயும் பாடுவார் மகிழக் கொடை கொடுத்த மன்னன் ஒருவன் செய்தி கூறப்படும்பொழுது, அம்மன்னன் பற்றிய இலக்கிய மரபு நிலவி வந்துள்ளமை பெறப்படுகிறது.
பண்டைத் தமிழ்ச் செய்யுட்கள் வாய்மொழி இலக்கியங்களே என்பதை எடுத்துக்காட்ட, இன்னும் இரண்டொரு சான்றுகளைக் காட்டலாம் யாப்பு என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். 'யா' என்னும் வினையடினின்றும் அமைந்த இச்சொல், சுட்டுகை, செய்யுள் என்று பொருள்படுவது. யாப்பிலக்கணம், செய்யுளிலக்கணம், பண்டைக் காலத்திலே "பாட்டை யாத்தார்" என்றே கூறுவர். யாத்தல் என்றால் பிணித்தல், செய்யுள் முதலியன அமைத்தல். சொல்லுதல், என்றெல்லாம் பொருள் உண்டு. சான்றோர் இலக்கியங்கண்டு எழுந்த பேரிலக்கண நூலாம் தொல்காப்பியத்தில் இவ்வழக்குகளைத் தௌிந்து கொள்ளலாம். உதாரணமாக, பொருளதிகாரம் மரபியலில்,
"பல்வகையானும் பயன்தெரி யுடையது
சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர்"
என்னுமிடத்து, "யாத்தனர் புலவர்" கூறினர் புலவர்" என்றே பொருள் படும். யாப்பு என்பது வாயாற் கூறப்படும் செய்யுளாகும். மாலை கட்டுவது போலவும், துணி தைத்தல் போலவும் சொற்களைக் கொண்டு பாட்டுக் கட்டுபவனே வாய்மொழிப் புலவன். பண்டைய கிரேக்கத்திலும் Rhapsode என்னும் பதம்பாட்டுத் தைப்பவன் என்றே நேர் பொருள்படும் இத்தகையோர் வாய்மொழிப் புலவராகவே இருந்தனர்.
இனி, கிளவி என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். சான்றோர் செய்யுட்களில் கிளவி, கூற்று ஆகிய இரண்டும் ஒரு பொருளுடையவாய்ப் பயின்று வருவன. பேசுதல், மொழிதல், எடுத்துரைத்தல் என்று பொருள்படும் இச்சொற்கள் வாய்மொழியையே சிறப்பாகக் குறிப்பன என்பது வௌிப்படை. கிளவி என்பது ஓர் அகப்பொருள் துறை என்பதும் மனங்கொளத் தக்கது. கிளவி என்பது தனியொரு சொல்லினை மட்டுமன்றி ஒரு முழுப் பாடலையுமே குறித்தது. உதாரணமாக நற்றிணைப் பாடலொன்றிலே (282) 'கிளவி' என்னுஞ் சொல் வழங்கப்பட்டிருக்குமாற்றைக் கவனிக்கலாம்.
"அருநோய்...
வணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்
கிளவியில் தணியின் நன்று மன்..."
தோழி கூற்றாய இப்பாடலில், "முருகவேளின் முன்பு இடப்பட்ட சுழற்சிக் கொட்டையை கொண்டு ஆராய்ந்து கூறும் சிறந்தறிவு வாய்ந்த வேலனது கூற்றால் (பாட்டால்) நோய் தணியப்படுமாயின் அது மிக நல்லதேயாம்" என்று கூறப்படுகிறது. வேலனது வாய்மொழிப் பாடலைக் கிளவி எனப் புலவர் குறிப்பிடுவது உற்று நோக்கத் தக்கது. சான்றோர் இலக்கியஞ் செய்த காலத்தில் கிளவி, கூற்று என்பன ஒரு பொருட் சொற்கள். இவை சொல், பேச்சு, வாய்மொழிப் பாடல் முதலியவற்றைக் குறித்தன.
யூகோசிலாவிய வாய்மொழிப் பாடல்களுக்கிடையே ஆராய்ச்சி செய்துள்ள பேராசிரியர் லோட் இது குறித்துப் பின் வருமாறு கூறியுள்ளார். "அக்கவிஞரைப் பார்த்து சொல் என்பதற்குப் பொருள் யாது என்றால், தெரியாது, என்பர்; அல்லது ஒரு தனிச்சொல்லையோ, சொற்றொடர்களையோ உதாரணங் காட்டுவர். அவை கூற்று எனப்படும். அதாவது கவிக் கூறுகளும், முழுக்கவிதையும் 'கிளவி' அல்லது 'கூற்று' என்றே வழங்கப்படும்.
வாய்மொழிப் புலவரது கலையை உடனிருந்து அவதானித்து ஆராய்ந்த பேராசிரியரின் கண்டுபிடிப்பு, தொல்காப்பியர் கருத்தை ஒத்ததாகவே உள்ளது. சான்றோர் செய்யுட்கள் வாய்மொழி இலக்கியங்கள் என்பது இதனால் உறுதிப்படுகின்றதன்றோ?
பன்மொழிகளிலுள்ள வீரயுகப் பாடல்களை நன்கு ஆராய்ந்துள்ள பேராசிரியர் சி.எம்.பௌரா அவற்றிற்குப் பொதுவாகப் பின்வரும் எட்டு அம்சங்கள் இருப்பதைக் காட்டியுள்ளார்.
1. ஒரு நிகழ்ச்சியை அல்லது கதையை எடுத்துக் கூறுவதாக இருத்தல்.
2. பெரும்பாலும் வீரயுகத்திலே தோன்றியனவாக இருத்தல்.
3. சிறிய விஷயங்களையும் நுணுக்கமாக வருணிப்பதாயிருத்தல்; உதாரணமாக வருவோர் போவோரை உபசரிக்கும்முறை ஆடை, அணிகலன்கள், உண்டாட்டு, புரவி, யானை ஆகியன இயற்கையோடமைய வருணிக்கப்படுதல், சுருங்கக் கூறின் பருப்பொருள்கள் நன்கு சித்தரிக்கப்படுதல்.
4. கவிஞன் தன் கூற்றாகக் கவிதை பாடியிருப்பினும் பெரும்பகுதிப்பாடல்கள் பாத்திரங்களின் கூற்றாக இருத்தல்.
5. தொடர்கள், கருத்துக்கள் ஒரே தன்மையனவாக மீண்டும் மீண்டும் வருதல். (அவை ஒரேவழி மாறியும் விரவியும் வரும்)
6. பாடல்கள் அடியுடன் அடிசேரப் பொருள் நிறை பெறுமட்டும் நிமிர்ந்து செல்லுதல்.
7. பாடலின் தலைமகன் வீரபுருடன், புகழெனின் உயிருங் கொடுக்கம் அவனது ஆண்மையும் புகழுமே பாடலின் விழுமிய பொருளாயிருத்தல்.
8. உண்மையை உரைப்பதாகவே அமைந்திருத்தல்; செவிவழியாகவோ அன்றிக் கண்ணாற் கண்ட புலக்காட்சியினாலோ நிகழ்ந்தவற்றைக் கூறுவதாகவே அமைந்துகிடப்பன. அதனாலே பிற்காலக் காவியங்களிலும், முற்காலப் பாடல்கள் வரலாற்றுச் செய்திகளை அதிகம் உடையனவாக உள்ளன.
திரு. பௌரா கூறியுள்ள எட்டு அம்சங்களும் சான்றார் இலக்கியத்திற் சரிவரப் பொருந்தியிருக்கக் காணலாம். மேற்கூறிய அம்சங்கள் எட்டினையும் இருபெரும் பிரிவிற்குள் அடக்கிக் கொள்ளுதல் கூடும்.
(1) ஒன்று, பாடல்களின் மொழி நடை, யாப்பு, காலம் இலக்கிய நெறி முதலியன சம்பந்தமானது.
(2) மற்றொன்று, பாட்டுடைத் தலைவர்கள், அவர்தம் வாழ்வியல், குறிக்கோள் உடைமை முதலியன சம்பந்தமானது. சுருங்கக் கூறின் வீரப்பாடல்களின் உருவமும் உள்ளடக்கமும் ஒப்புமையுடையன வாயுள்ளன. கிரேக்க மொழியுட்படப் பிறமொழிகள் பலவற்றில் உள்ள வீரயுகப் பாடல்கள் சில தலையாய நாயகர்களது வீரத்தையும் புகழையும் விதந்து கூறுவனவாயிருப்பதைக் காண்கிறோம். அதுபோலத் தமிழ் வீரப்பாடல்களிலும் கரிகாலன், நெருஞ்செழியன், நெடுஞ்சேரலாதன் முதலிய சிலரே முழுமையான பாத்திரங்களாக வார்க்கப்பட்டுள்ளமை நோக்கத் தக்கது. உதாரணமாக, தமிழ் வீரப் பாடல்களிலும் இடம்பெறும் தலைமக்கள், பெரியோர் ஒழுக்கத்துக்கு மாறானவற்றிற்கு நாணுபவராய், பழியஞ்சுவராய்த் தமக்கென ஓர் அறக் கோட்பாடுடையவராய்க் காணப்படுகின்றனர். நாண், பழி, அறன் ஆகிய சொற்கள் ஈண்டுக் கவனிக்கத்தக்கன. கிரேக்க காவியங்களிற் பயிலும் Aidos Nemesis, Dike ஆகிய சொற்கள் முற்கூறிய தமிழ்ச் சொற்களுக்கு நேரான பொருளுடையன. அது போலவே சான்றோர் செய்யுட்களில் பால்வரை தெய்வம் சிறப்பானதோர் இடத்தைப் பெற்றுள்ளது. கிரேக்கச் சொல்லான Moira எல்லா வகையிலும் இதனை ஒத்துள்ளது. இவற்றை எல்லாம் உற்று நோக்கும் பொழுது உலகின் பல பகுதிகளிலே தோன்றிய வீரயுகப் பாடல்களுக்கு நிகராகத் தமிழிலக்கியத்திற் சிறப்புப் பொருந்திய சான்றோர் செய்யுட்கள் அமைந்துள்ளமை உறுதிப்படும். இறுதியாகக் குறிப்பிட்ட சான்றோர் என்னும் சொல்லையே எடுத்து நோக்கின், அது வீரர், உயர்ந்தோர், சிறந்தவர் என்று பொருள் படுவதைக் காணலாம். பண்டைக் கிரேக்கப் பாடல்களிலும் வழங்கும் Agathos என்ற சொல் இதற்கு நேர்ப் பதமாகும்.
பிற மொழிகளிலுள்ள வீரயுகப் பாடல்களைப் படிப்பதாலும், அவை பற்றிய ஆராய்ச்சிகளைத் தெரிந்து கொள்வதாலும் ஆரம்ப நிலையிலிருக்கும் தமிழ் வீர யுகம் பற்றிய ஆராய்ச்சி பெரிதும் பயனடையும், அதே சமயத்திற் பிற மொழியாராய்ச்சியாளர்களும் தமிழிலக்கியச் சான்றுகளிற் பயன்பெறுவர் என்று கூறவதில் தவறிருக்காது என்றே எண்ணுகிறேன். ஏனெனில், வீரயுகப் பாடல்களின் ஆராய்ச்சியானது தொடக்கத்திலிருந்தே ஒப்பிலக்கிய ஆய்வாகவே இருந்து வந்துள்ளது.

No comments:

Post a Comment