Friday, 12 January 2018

மார்க்சிய படிப்பு 6

கீழடி மறைக்கப்படுவது ஏன்?
======================
#மார்க்சிய_படிப்பு_வட்டம்_மதுரை தோழர்கள் கீழடி சென்றது பற்றி எழுதிய நான், கீழடியின் நிலை அதிர்ச்சி அளித்தது என்று எழுதினேன். அது தொடர்பான விவரங்கள் இனி பகிர்வேன். இது அந்த வரிசையில் ஒன்று. (களப் பணிகள், மற்ற நெருக்கடிகள் காரணமாக நான் எழுதாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது)
கீழடி ஆய்வு தொடரும் என்று மத்திய அரசு அறிவித்தது. நாங்களும் தோண்டுகிறோம் என்று
ஜெயா ஆவியின் புத்திரர்களும் நிதி ஒதுக்கீடு செய்தாக அறிவித்தனர். நாங்கள் கீழடி சென்ற போது தோண்டப்பட்ட அனைத்து இடங்களும் மூடப்பட்டிருந்தன. பெயர் பலகைக் கிழிந்து தொங்கியது. இவைதான் மத்திய- மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டின் லட்சணம்.
கீழடி வெளிவருவதை மத்தியில் ஆளும் காவிகளும், (காவி உத்தரவின்படி) மாநிலத்தில் ஆளும் மூடர்களும் விரும்பவில்லை. ஆரியர்கள்தான் இந்தியாவின் தொல்குடிகள் என்ற மாயையை உடைக்கும் மந்திர சம்மட்டி கீழடியில் உள்ளது. இந்து வரலாறுதான் இந்திய வரலாறு என்பது உடைந்தால் காவி ராஜ்ஜியக் கனவு கலைந்துபோகும்.
மனிதப் பரவல் பற்றிய அறிவியல் ஆய்வுகள், ஆப்பிரிக்காவில் இருந்து பல அலைகளாகத் தொல் மனிதர்கள் இந்தியா என்று இன்று அறியப்படும் பூமிப் பரப்புக்கு வந்ததைக் காட்டுகின்றன. தொன்மைப் பரவல்கள் கடற்கரை வழியாக நடந்திருக்க வேண்டும். எனவே, சிந்து உள்ளிட்ட நதிக்கரை நாகரீகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேற்குக் கடற்கரையில் நதிக்கரை நாகரீகத்திற்கான புவியியல் வாய்ப்பு இல்லை என்பதால் கிழக்குக் கடற்கரை, அதிலும் தாமிரபரணி, வைகை கடற்கரை, தெற்கு முனையின் அருகில் இருப்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன.
இதுவரை கீழடியில் “நாங்கள் வெறும் நான்கு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே தோண்டியுள்ளோம். அதுவும் ஒரே ஒரு பகுதியில். இந்த பகுதி(யில் நாகரீகத்திற்கான அடையாளம்) 6.5 மீட்டர் ஆழம் வரை போகிறது.“என்று இந்தியத் தொல்லியல் துறையின் சார்பாக கீழடியில் ஆய்வை வழிநடத்தி பின்னர் மாற்றம் செய்யப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். காலப்போக்கில் ஏற்படும் நிலப்பரப்பு மாற்றத்தின் ஆழத்திற்குச் செல்ல பழைய காலம் புலப்படும் என்பதால், அமர்நாத் கூற்று முக்கியமானதாகும்.
ஆக, அறிவியலை மறைக்க, கற்பனையான இந்து பிற்போக்கு வாதத்தைக் காக்க இந்திய- தமிழக அரசுகள் முயற்சியெடுக்கும் சூழலில், மண்ணை எடுத்து பயணம், தமிழர் பெருமை என்ற மற்றொரு மாயையெல்லாம் உதவாது. உண்மையை, ஏறக்குறைய சில பத்தாயிரம் ஆண்டுகள் பழமையான உண்மையை வெளிக்கொணர அறிவியலை முன்னெடுக்க வேண்டும்.
அதற்கு வாய்ப்பாக இந்தியத் தொல்லியல் துறையின் சார்பாக கீழடியில் ஆய்வை வழிநடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணனுடன் நிகழ்த்திய மற்றொரு பேட்டியின் சாரமான கருத்துகள் கீழே தரப்பட்டுள்ளன.
// இதுவரை, தமிழ்நாட்டில் இரண்டு பண்டைய வாழிடங்கள்தான் அகழ்வாராய்ச்சிக்கு ஆட்பட்டிருக்கின்றன. அரிக்கமேட்டிலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் (முறையே) 1947 மற்றும் 1965ல் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. மற்றவை அனைத்தும் (பண்டைய) பிணப்புதையல் இடங்களே. மூன்றாவது (பண்டைய) வாழிடம் கீழடி மட்டுமே. ஆனால், முந்தைய இரண்டைக் காட்டிலும் முக்கியத்துவம் உடையது. நாங்கள் வைகை நதிக்கரையில் 293 இடங்களில் சர்வே செய்தோம். அவற்றில் அகழ்வாராய்ச்சி செய்ய வாய்ப்புள்ள 100 பண்டைய வாழிடங்களைக் கண்டுபிடித்தோம். அவற்றில் மிக முக்கியமானது கீழடி.
தமிழ்நாட்டில் நகர நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்களை சங்க இலக்கியங்கள் வழங்குகின்றன. அதற்கான தொல்லியல் சாட்சியங்களைத் திரட்ட நாங்கள் முயன்று வருகிறோம். மதுரையை நாம் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது. ஏனெனில் அது தொடர்ச்சியான வாழிடமாக இருந்து வருகிறது. மதுரைக்குத் தென்கிழக்கில் 15 கி.மீ தொலைவில் உள்ள கீழடி தமிழ் பண்பாடு குறித்து மிகப் பெரும் ரகசியங்களை வெளிப்படுத்தும்.
எந்த தொந்தரவுக்கும் ஆளாகாமல் இருந்த பகுதி கீழடி. .. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆகப் பெரும் அகழ்வாராய்ச்சி இதுதான். ... 110 ஏக்கர் பரப்பில் நாங்கள் வெறும் 1 ஏக்கரில் மட்டும்தான் அகழ்வாராய்ச்சி செய்துள்ளோம். நாம் இன்னும் பத்து ஆண்டுகள் இப்பணியைத் தொடர்ந்தால்தான் போதுமான ஆதாரங்களை வெளிக்கொண்டுவர முடியும்….
இதுவரையிலான கார்பன் டேட்டிங் கணக்கீடுகள் கிறிஸ்துவுக்கு முந்தைய 200 ஆண்டுகளைச் சுட்டுகின்றன. (நாங்கள் தேர்ந்தெடுத்த 20 மாதிரிகளில் 2 மட்டுமே அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. நான் பலமுறை மத்திய அரசுக்கு எழுதி 20 மாதிரிகளையும் அனுப்பக் கேட்டேன். (ஆனால், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.)
தொடர்ச்சியாக, வெகு நீண்ட காலம் வட இந்தியாவில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதால்தான் பாடலிபுத்திரம், அஸ்தினாபுரம் போன்ற நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அதுபோன்ற ஆய்வு நடக்கவில்லை. அதனால்தான், மதுரை ஓர் நகரம் (நகர நாகரீகம்) என்பதற்கு இலக்கியச் சான்றுகள் இருந்தபோதும் தொல்லியல் சான்றுகள் கிடைக்கவில்லை. .
(முதல் படம்: கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணன்)
(முழு பேட்டியையும் ஆங்கிலத்தில் படிக்கhttp://www.caravanmagazine.in/vantage/keezhadi-archaeologist-amarnath-ramakrishna-transfer-sangam

No comments:

Post a Comment